…… தமிழகத்தில் தொழில் முனைவோர் கண்ணீர்…
நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் நாம் சிந்தும் உதிரத்தில்
யாருக்கோ அள்ளிவிடும் அரசாங்கச்சட்டங்கள்
ஊர் கெடுக்கும் மனிதரெல்லாம் உண்மையை உதறிவிட்டு
புல்வளர்க்கப் பயிரழித்துப் போடுகிறார் திட்டங்கள்,
ஓய்வெடுக்க நேரமின்றி ஊர்பிழைக்க தான் பிழைக்க
உழைக்கின்ற மனிதர்துயர் அறிந்ததவர்கள் யாரின்று
ஆய்வெடுத்து ஆவணத்தில் எழுதிப்பார் உண்மைசுடும்
உண்மையான தொழிலாளி முதலாளி தானென்று;
யார்கேட்டார் செவிமடுத்து; அலட்சியமாய் இருந்ததினால்
நேர்கோட்டில் போகாமல் சீர்கெட்ட மின்சாரம்,
ஊர்கூட்டி அழுதென்ன; ஊடகங்கள் எழுதியென்ன
இறங்குமுகம் காணும் தொழிலோடு வியாபாரம்,
நாள்காட்டி பார்க்காமல் நலம் துக்கம் கேட்காமல்
தோளேற்றிச் சுமந்தவர்கள் தெருவிறங்கும் கலிகாலம்,
வாய் பூட்டி மெளனிகளாய் வாடுகின்ற நன்மக்கள்
மேடேறச் சுமைதாங்க முன்வருமா அரசாங்கம்;
வெறுங்கையில் முழம்போடும் வித்தைகளைக் கற்றவனும்
சாத்தானின் வேதத்தைச் சரியென்று சொல்பவனும்,
பிறர்கையில் சிந்துகின்ற தேன்வழித்துக் குடிப்பவனும்
பல்லிளித்து தீயோர்க்குப் பல்லாக்குச் சுமப்பவனும்,
பெருமழையில் நனைபவரின் விழிநீரைப்பொய்யென்று
மிரட்டுவதும் உருட்டுவதும் சிறுகதையா, தீவினையா,
சிறுதொழிலும் பெருந்தொழிலும் கைவிட்டுப் போனபின்னர்
மீண்டுமது தளைத்துயர மந்திரத்து மாங்கனியா;
ஆள்பவர்க்கு ஐந்தாண்டு முடிந்து போகும்
அடுத்துவரும் தலைவருக்கு விடிந்து காணும்,
கேட்பவர்க்குத் தினம் கொடுத்துச் சோர்ந்து போகும்
தொழில் முனைவோர் பட்ட பாடு என்னவாகும்,
நாளைவரும் புத்தாண்டு பொங்கல்நாளில்
நான் பாடும் விருத்தத்தின் வருத்தம் கேட்டு,
வேலமரும் பலகரமும் விளங்குகின்ற ஆறுமுகம்
மயிலமரும் திருமுருகா வழியைக்காட்டு!
..... நன்றி. திரு.சுப்பிரமணியம் M.D (iakoka) அவர்களுக்கு.
முருகன் நல்வழி காட்ட இப்பொங்கல் திருநாளில் வேண்டிக்கொள்வோம்.