எலியும் பூனையுமாக இருந்த மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் காலத்தின் கட்டாயத்தாலும் அரசியல் சூழ்நிலைகளினாலும் ஒருவழியாக ஒன்று சேர்ந்துவிட்டார்கள். குடும்பப் பிரச்சனையாக வீட்டோடு இருக்க் வேண்டியதை கண்ணீர் ததும்பும் கட்டுரைகள் எழுதியும், கனல் கக்கும் கவிதைகள் புனைந்தும் குடும்பத் தகராறை பொதுமேடைக்கு எடுத்து வந்தார் கருணாநிதி. சரமாரியான குற்றச்சாட்டுகளை கருணாநிதி எழுப்பினாலும் கலாநிதி மாறன் எழுப்பிய பரபரப்பான கேள்விகளுக்கு இன்று வரை கருணாநிதியிடம் இருந்து பதிலே இல்லை. சண்டைக் காலத்தில் என்ன நடக்கிறது என்று சொன்ன கருணாநிதி, சமாதானத்துக்கான காரணத்தையும் வெளிப்படையாகச் சொல்லக் கடமைப்பட்டவர் ஆனாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது நிச்சயம்.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்த கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'அது முடிந்து போன விஷயம்' என்று பதில் கூறி மக்களை அதிர வைத்திருக்கிறார் தமிழக முதல்வர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ஊழல் இந்த டெண்டர் விவகாரத்தில் நடந்துள்ளதாக நம்பப்படும் இந்த விஷயம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதால் எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்?
இந்தியாவை அதிர வைத்த போபர்ஸ், டான்ஸி உள்ளிட்ட பல ஊழல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய ஊழல் சரித்திரத்தில் முதலிடம் பெற்ற பெருமை ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உண்டு. தயாநிதி மாறன் தொலைதொடர்பு மந்திரியாக இருந்த போது அவரால் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அவருக்கு அடுத்து அமைச்சரான ராசா தெரிவித்தார். சில நாட்களில் ராசா செய்த குளறுபடிகளால் தொலைத் தொடர்புத் துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாநிதி மாறன் மட்டுமல்லாமல் மத்திய எதிர்கட்சி எம்.பி.க்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள் - மேலும் இந்த விவகாரம் குறித்து டெல்லி மீடியாக்களும் தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளன. தயாநிதி மாறனோ அல்லது ராசாவோ - நடந்த குளறுபடிகளுக்கு அவர்களது கட்சித் தலைவர் என்ற முறையில் கருணாநிதியே பொறுப்பாவார். அப்படி இருக்க தங்களது சொந்த குடும்பச் சண்டை தற்காலிகமாக ஓய்ந்ததால் ஸ்பெக்ட்ரம் விவகாரமே முடிவுக்கு வந்து விட்டது என்று கருணாநிதி அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்?
ஏற்கனவே நாட்டின் நிதிநிலைமை பாதுகாப்பு தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மத்திய அரசின் நிலை பாட்டால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது தங்களது பலத்தாலோ அல்லது மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலோ அல்ல - எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால்தான். இதை உணர்ந்து தி.மு.க தலைவரது கட்டளைகளையும் மீறி மத்திய அரசு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் முறையான விசாரணை நடத்த முன் வரவேண்டும். போபர்ஸ் விவகாரம் தான் ராஜீவ் அரசை பதவியிழக்க வைத்தது - இத உணர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வைத்தால் நாட்டுக்கு நல்லது.
- மீனா [feedback@tamiloviam.com
No comments:
Post a Comment