ADS

AD

Tuesday, December 2, 2008

பல கடவுளரா, ஒரே கடவுளா?



வீட்டில் சுழலும் மின்விசிறி காற்று வீசுகிறது. அதே வீட்டின் குளியலறையில் இருக்கும் வெந்நீர்த் தொட்டியில் சுடுநீர் வருவதற்கும் காரணம் அதே மின்சாரம்தான். அதே மின்சாரம் ஏ.சி.யில் குளிர்ச்சியைத் தருகிறது. மின்விளக்கில் ஒளியாக இருக்கிறது.

எனக்கு ஆற்றலின் இந்தப் பல வடிவங்கள் பிடிக்கவில்லை என்று சொல்கிறவன் நேரடியாக மின்சாரக் கம்பியைத் தொட்டால் ஷாக் அடித்து விழவேண்டியதுதான். மின்சாரம் நேரடியாக எந்தப் பலனையும் தருவதும் கிடையாது.

குணம் குறியில்லாத இறைத்தத்துவம் எல்லாவற்றையும் கடந்தது. அது கடவுள், பிரம்மம் என்ற சொற்களுக்கும். ஏன் மனதுக்கும் கூட அப்பாற்பட்டது. அப்படிப்பட்ட ஓர் இறைவனைச் சொல் வடிவத்தில் அழைக்கும்போதே அதற்கு ஒரு பெயர் வந்து விடுகிறது. அவரைச் சிம்மாசனத்தில் அமர்த்தும்போதே அவருக்கு ஓர் வடிவம் இருப்பது உணர்த்தப்படுகிறது. ஆகவே வடிவம், பெயர் இல்லாத கடவுளைத் தொழுபவர்களின் நூல்கள் கூட அவரை வர்ணிக்கத் தொடங்கும்போது அவருக்குப் பெயரும் வடிவமும் வந்துவிடுகிறது.

ஆனாலும் சனாதனமான இந்து மதம் பெயரும் உருவமுமற்ற கடவுளையும் ஏற்கிறது. அதே நேரத்தில் கடவுளை மனிதன் எந்த வடிவில் அழைக்கிறானோ அந்த வடிவில் வந்து அருளைத் தர வல்லவன் என்ற தத்துவத்தையும் ஏற்கிறது. எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் வல்லவன் என்று கூறும்போதே இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறான், எந்தப் பெயரில் பக்தியோடு அழைத்தாலும் வருவான் என்பவற்றையும் ஒப்புக்கொண்டுதானே ஆக வேண்டியிருக்கிறது?

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்

என்று பள்ளிக்கூடத்திலே புரிந்துகொள்ளாமலே படித்தோம். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவருக்கு உண்மைத் தத்துவமாக அவனே இருக்கிறான். இல்லை என்பவருக்கு இல்லாத அவ்வெறுவெளியாக எங்கும் நிற்பவனும் அவனே என்பதைப் புரிந்துகொண்டால் நல்லது.
மின்சாரம் நமது உபகரணத்துக்கு ஏற்ப வெப்பமாகவோ, குளிராகவோ, காற்றாகவோ, காந்தமாகவோ, நீர்பாய்ச்சும் சக்தியாகவோ மாறுகிறது. ஆனால் குறுகிய பார்வை கொண்டவர்கள் மின்சாரம் நீர்தான் பாய்ச்சும், காற்றுத்தான் வீசும் என்று தாம் அறிந்த ஒரே செயல்பாட்டுக்குள் அதை அடைக்கப் பார்க்கிறார்கள்.

பிரம்மம் என்னும் இறைத் தத்துவமும் அப்படித்தான். நிர்விகல்ப சமாதியில் உணர்ந்தவர்களுக்கு பரப்பிரம்மமாகவே எல்லாவற்றிலும் தென்படும். அல்லாதவர்க்கு அவரவர் கும்பிடும் தெய்வமாக வந்து அருள் செய்யும். நன்றி: பசும்பொன் தேவர்

No comments: