ADS

AD

Tuesday, December 28, 2010

வருக 2011

"மன்னாதி மன்னராக வலம் வந்த மந்திரிகள் மாயமாகி மக்கள் பணி புரிவோர் ஆளும் காலம் வரும்
மின்னும் வெண்திரைகள் மதி கெடுக்கும் நிகழ்ச்சிகட்கு முடிவுகட்டி முடங்க வைக்கும் முற்போக்கு காலம் வரும்
தவறிழைத்து பொருள் சேர்த்த நீதிமன்னர் தடம் மாறிப்போனதாலே அவர்தம் தறி கெட்டு போகின்ற காலம் வரும்
படித்தவர்கள் சூதாடும் பணச்சந்தை பலமிழந்து அவர்தாம் பண்போடு பொருளீட்டும் காலம் வரும்

பள்ளிகளே பணம் சேர்க்கும் வணிக நிலை மாறி நல்லதொரு தலைமுறையை நமக்கீனும் காலம் வரும்
வெளிநாட்டு வேலை என்னும் விபரீத மாயை நீங்கி நம்நாட்டின் சேவையே நலமென்னும் காலம் வரும்
காவலரே கொள்ளையராய் ஆன நிலை நீங்கி காவலே தேவையில்லை எனும் பொற்காலம் வரும்
ஊடகங்கள் உண்மைகளை உரைக்கா நிலை மாறி நடுவுநிலை தவறாமல் நவிலும் நற்காலம் வரும்

வீடுகளாய் ஆகிவிட்டு எஞ்சிநின்ற விளைநிலங்கள் விஞ்சுகின்ற விளைச்சல் தரும் காலம் வரும்
மாடுகள் உண்ணுகின்ற புல்களுக்கே கழிவுநீர் பயனாகி மாசில்லா நீர்த்தேக்கம் நாடெங்கும் பெருகி வரும்
இலவசங்கள் என்னும் பிச்சைகள் இல்லாமல் ஒழிந்து, இருளான பாரதம் பகலாக மாறிட தடையின்றி மின்சாரம் தவழ்கின்ற காலம் வரும்
மதுவிலக்கு நாடெல்லாம் சட்டமாகி மனை மக்கள் மாட்சி பெரும் காலம் வரும்

தலைமுறைக்கு பொருள் சேர்த்து தனயனையே அரியணைக்கு அமர்த்தும் இக்காலம் மாறும்
விலைகொடுத்து வாங்குகின்ற வாக்கு வெற்றி அரசியல் வீணாகும் காலம் வரும்
நல்லதொரு பாரதத்தை உருவாக்க எமக்கெல்லாம் அருள்புரிவாய் எம்பெருமானே
நல்லதொரு தலைவன் வேண்டும் வருமாண்டில் எமக்கருள்வாய் முருகப்பெருமானே"

Wednesday, January 27, 2010

நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!

இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன் கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னைப்பார்.
1ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்.
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர்சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் கேட்டார் நான் யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்
சமைப்பதற்கு கேஸும் அடுப்பும் இலவசம்.
பொழுது போக்க வண்னத்தொலைக்காட்சி பெட்டி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்?
நான் கேட்டேன் உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்..
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்,
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,
படிப்பு சீருடையுடன், மதிய உணவும் இலவசம் முட்டையுடன்,
பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம்,
பள்ளி செல்ல பஸ் பாசும் இலவசம்
தேவையென்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்
1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்.
மகள் பிள்ளை பெற்றால் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்...
நான் எதற்காக உழைக்க வேண்டும்!!!
வியந்து போனேன் நான்!!!
என் உயிர்த்தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு...
ஒன்று லஞ்சம் மற்றொன்று பிச்சை!!!
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்..
இலவசம் நின்று போனால் உன் நிலை!!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!
இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் ,
மாறும் நிலை இன்னும் வெகு தொலைவில் இல்லை..
தமிழா விழித்தெழு..
உழைத்திடு..
இலவசத்தை வெறுத்திடு..
அழித்திடு..
தமிழகத்தை தரணியில் உயர்த்திடு!!!
நாளைய தமிழகம் நம் கையில்..
உடன் பிறப்பே சிந்திப்பாயா!!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

இதை இன்றைய தமிழகம் என்ற தலைப்பில் பதிவிட்டவர்... சச்சிதானந்தன் முருகேசன் அவருக்கு நன்றிகள்...