ADS

AD

Saturday, December 26, 2009

தாய்(பறவை) பசித்திருக்கும் தனிமை

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு 2010 வாழ்த்துக்கள்

உண்ணுகின்ற வட்டிலிலே ஓட்டையிடச் சொல்லுகின்ற

உத்தியே உயர்ந்ததென்னும் தலைமை வேண்டாம்;

உடனிருந்து பணியாற்றும் அதிகாரியைக் கொன்று

தன் குடும்பம் உயர்த்துகின்ற மடமை வேண்டாம்;


மின்னுகின்ற தாரகையைத் தினமெண்ணும் திருத்தொண்டே

அரசாங்கப் பணியென்னும் அவலம் வேண்டாம்;

கண்ணெதிரே நடக்கின்ற கயமைகளைக் கண்டபின்னும்

கைகட்டி வாய்பொத்தும் அச்சம் வேண்டாம்;


எண்ணுகின்ற எண்ணமும் எழுதிப்படிப்பதுவும்

பணம் பண்ணத்தான் என்னும் கல்வி வேண்டாம்;

எதிரிலே இருப்பவனை ஏமாற்றிப்பொருள் சேர்க்கும்

ஏய்ப்புக்குத் துதிபாடும் சந்தை வேண்டாம்;



ஒரு கூட்டுப்பறவைகள் பல நாட்டில் இரைதேட

தாய்ப்பறவை பசித்திருக்கும் தனிமை வேண்டாம்;


பலநாட்டுப் பண்பாட்டைப் போற்றியே மதித்தாலும்

நம் பண்பைச் சீரழிக்கும் துணிவு வேண்டாம்;



ஏறுகிற எல்லாமும் இறங்குமெனும் சித்தாந்தம்

இறைவனது ஆட்டமெனும் உணர்வு வேண்டும்;

ஒருகதவு மூடிவிட்டால் மறுகதவு திறக்குமெனும்

ஓயாத நம்பிக்கை இருக்க வேண்டும்;


மாறுகிற பழமையுடன் சேருகிற புதுமைகளை

வடிகட்டித் தேர்ந்தெடுத்துத் தழுவ வேண்டும்;

தானுயரும் வேளையிலே தனைச்சார்ந்த அனைவரையும்

தோளேற்றிச் சுமக்கின்ற மனது வேண்டும்;


பாரதியும் கம்பனும் வள்ளுவனும் உரிமையுடன்

தமிழ் சொல்லிக் கேட்கின்ற கல்வி வேண்டும்;

பாரதிரப்பல தொழிலின் சிகரத்தை தொடுமளவு

நுண்ணறிவுத் திறம்படைத்த இளமை வேண்டும்;


வானுயரக் கொடிபறக்க பாரெங்கள் தேசமென்று

ஒருசேரக் குரல் கொடுக்கும் மாண்பு வேண்டும்;

வருகின்ற புத்தாண்டில் வடிக்கின்ற பொங்கலிலே

வள்ளி மணவாளவன் கருணை வேண்டும்;


இனிய கவிதை ஆக்கியவர்: திரு. இயக்கோகா சுப்பிரமணியம் அவர்கள்

Tuesday, October 27, 2009

எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
......................
.....................
...................நன்றி.
கவிஞர்.தணிகைச்செல்வன்

Thursday, September 10, 2009

திருவண்ணாமலை கிரிவலம்

------ஸ்வாமி ஓம்கார்

வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு. பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.


தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

மலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?

Friday, August 14, 2009

யாருக்கு சுதந்திரம்?



நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்

ஆனா

உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?


வட்டிக்கு பணம் கொடுக்கும்

பண முதலைகளுக்கு......


அசையா சொத்துக்கள் சேர்க்கும்

அரசியல்வாதிகளுக்கு....


லஞ்சம் வாங்குற அரசு,

காவல்துறை அதிகாரிகளுக்கு....


பெண்களை திருட்டுத்தனமாக

ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....


விவாகரத்து பண்ணாமல்

மறுமணம் புரிபவர்களுக்கு.....



கல்விக்கு அளவுக்கு மீறி

கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....


கட்டணமில்லாமல் அரசு

வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....


வாய்தா வாங்கி

ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....


கலப்படத்தில்

கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....


தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்

விசுவாசிகளுக்கு...


சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி

சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....


காவல் துறையின் காவலோடு?

ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....


ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை

வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....


சிறார்களை பணியிலமர்த்தும்

நிறுவனங்களுக்கு....


மதவெறியில் ரயில்,பேருந்துகளை

எரிப்பவர்களுக்கு....


சாமியின் பேரில் உலாவரும்

போலிச்சாமியார்களுக்கு....


இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்



நன்றி:http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_14.html

இந்தியச் சுதந்திரம்



வெள்ளைக்காரனிடம்
வாங்கி
வெள்ளைக்காரியிடம்
கொடுத்துவிட்டோம் !

thanks to : http://manavili.blogspot.com
நன்றி:கவிதை திரு.சா.வீரையாஅவர்களால் எழுதப்பட்டது.

Thursday, August 6, 2009

இறை உருவங்களுக்கான அணிகலன்கள்

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிகலன்களாக மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோபவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை முதலியவை பெரும்பாலும் அமையப் பெற்றிருக்கும்.

இவற்றில் மகுடமானது தலைக்கு மேல் அணியப்படுவதாகும். இது கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம் எனப் பலவகைப்படும். இவற்றில் திருமாலின் தலையில் இடம் பெறுவது கிரீட மகுடமாகும். தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது கரண்ட மகுடமாகும். சடையையே மகுடம் போல் அமைப்பது சடா மகுடம் எனப்படும். சடா மகுடம் பெரும்பாலும் சிவனுக்கே அமைக்கப்படும். மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு தீக்கிரீடம் எனப்படும் ஜீவால மகுடம் இடம் பெறும்.

அடுத்ததாக, காதில் அணியப்படும் அணிகலனைக் குண்டலம் என்பர். இது பத்ர குண்டலம், மகர குண்டலம் என இரண்டு வகைப்படும். இதில் விஷ்ணுவுக்கு இட்ம்பெறும் காதணிகளை மகர குண்டலம் என அழைப்பர். சிவபெருமானது காதணிகளாக வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் தோடும் இடம் பெறும். சிவபெருமானின் இடதுபுறப் பாதி உடல் சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டியே இவரது இடது காதில் தோடு இடம் பெறுகிறது.

அணிகலன்களில் கண்டிகை என்பதும் கண்டமாலை என்பதும் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன்களாகும். ஆரம் என்பது கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையாகும். கேயூரம் என்பது மேற்கையின் நடுவில் அணியப் பெறுவதாகும். யக்ஞோபவிதம் எனும் பூணூல் இடது தோளிலிருந்து வலப்புற இடுப்பு வரை காணப்படும் அமைப்பாகும். மார்பிற்குக் கீழும், உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலனே உதரபந்தம் எனப்படும். ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு சன்னவீரம் எனப்படும். இது வீரத்துடன் தொடர்புடைய ஆண்,பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். இதற்கு உதாரணமாக, சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி ஆகிய இறையுருவங்களைக் கூறலாம். கடிசூத்திரம் என்பது ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது. இதன் நடுவில் சிங்கம் அல்லது யாளிமுகம் அமைக்கப்படும். சிலம்பு எனும் அணிகலன் மகளிர்க்கும், கழல் எனும் அணிகலன் ஆடவருக்கும் உரியவை.

இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை

1. தலையணி வகை

2. கழுத்தணி வகை

3. காதணி வகை

4. மூக்கணி வகை

5. கையணி வகை

6. கை விரலணி வகை

7. இடையணி வகை

8. துடையணி வகை

9. பாத அணி வகை

10. கால் விரலணி வகை

என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி: டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்

Monday, August 3, 2009

மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!

திரு. தேவன் மாயம், காரைக்குடி அரசு மருத்துவர் அவர்களது http://abidheva.blogspot.com வலைத்தளத்திலிருந்து

கொலெஸ்ட்ரால் அல்லது கொழுப்புச்சத்து நம் உடலுக்குக் கேடானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது உடல் பருமன்,இதயநோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகள் வராதா?

எனக்கு கொலெஸ்ட்ரால் சரியான அளவு உள்ளது. எனக்கு மாரடைப்பு வராதுதானே? என்றெல்லாம் நாம் கேட்கலாம்.

முன்பு ஆம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை..

ஆம்.. தற்போதைய ஆய்வின்படி திடீர் மரணம் சம்பவிப்பதில் 30% பேர் முதல் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முன் அவர்களுக்கு இதய நோயோ கொழுப்புச்சத்தோ இருந்ததில்லை.

அப்படியாயின் இதயநோய் வருமா வராதா என்று கண்டுபிடிப்பது எப்படி? என்று கேட்கலாம்...

அதற்கு பதிலும் தற்போது கிடைத்துள்ளது.

கொலெஸ்ட்ரால் கொழுப்பு வெண்ணை போல் பிசுபிசுப்புடன் ஒட்டும் தன்மையுள்ளது. இந்த கொலெஸ்ட்ராலில் Total cholesterol ( மொத்த கொழுப்பளவு) பொதுவாக கீழ்கண்ட வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அவற்றைச் சுட்டியாகவே தந்துள்ளேன்.

உயர் அடர்த்தி கொழுப்பு (உடலுக்கு நலம் தருவதால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது) High density lipoprotein cholesterol (HDL-C)

குறந்த அடர்த்தி கொழுப்பு( உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது). Low density lipoprotein cholesterol (LDL-C)

ட்ரை கிளிசரைடு கொழுப்பு Triglycerides

மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்பு Very low density lipoprotein cholesterol (VLDL-C).

குறைந்த அடர்த்தி கொழுப்பு உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது. Low density lipoprotein cholesterol (LDL-C).

ஆகையால் குறைந்த அடர்த்தி கொழுப்பு இரத்தத்தில் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என்று கூறப்பட்டு வந்தது.

கொழுப்புகள் பொதுவாக நீரில் கரையாது. இரத்ததில் அதனால் சரியாக பயணிக்க முடியாது. ஆகையால் இவை வேறு ஒரு பொருளால் போர்த்தப்பட்டு(கவச வண்டி என்று நாம் சொல்லிக்கொள்வோம்) இரத்தத்தில் பயணிக்கின்றன.

இப்படி குறைந்த அடர்த்தி கொழுப்புக்களை ஏற்றிச் செல்லும் கலனாக LDL-P கவச வண்டி செயல்படுகிறது.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றிச்செல்லும் L D L- P க்களின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அது இரத்தக்குழயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இந்த நெரிசலில்தான் இரத்தக்குழாய் சேதமடைந்து(Atheroscerosis) விடுகின்றன.


இதுவே மாரடைப்புக்குக் காரணமாக அமைகிறது.

விடை இப்போது தெரிகிறதா? ஆம். LDL-P க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய சோதனையின் பெயர் NMR LIPID PROFILE .

ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோரும் இதய நோயால் இறக்கின்றனர். இந்த புதிய சோதனைகளின் மூலம் இதை அறிந்தால் நாம் நம் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாமே!!!

Sunday, July 19, 2009

சூரிய கிரகணம்

கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு.
கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள்.

இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்

செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.

பறவை மற்றும் விலங்கினங்கள் கூட கிரஹணத்தன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா?

கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.

கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.
எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.
ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.

இந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி இந்தியாவில் முழு கிரஹணம் ஏற்படுகிறது. காலை 5.29 முதல் 7.15 வரை கிரஹண நேரம்.

கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.

கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.

கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.

ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.

தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்

சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.

கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

கிரஹணம் பூச நட்சத்திரத்தில் அமைவதால் கடகராசி, மகராசியில் பிறந்தவர்களும் , அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அதிக ஆன்மீக முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்வதோ அல்லது வீட்டில் இருந்து ஜபம் செய்வதோ மேன்மை கொடுக்கும்

………….நன்றி: ஸ்வாமி ஓம்கார்

Wednesday, July 1, 2009

வாங்க விரதம் இருக்கலாம்

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணாக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்படாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலாக மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.


விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெறுவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதே அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையில் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாட்கள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப் படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமையாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்பு புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

-----------------------------ஸ்வாமி ஓம்கார்

Wednesday, June 24, 2009

கண் குருடாகும் வர்ண வீடு


தமிழ் நாட்டில் சில பழக்கம் மக்களிடையே பரவி வருகிறது. அதில் முக்கியமானது கண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும். 

ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.

இந்த ந(ச)வநாகரீகத்தை பற்றி விசாரித்தால் அது 'வாஸ்து' குறைக்காக பூசுவதாக சொன்னார்கள். வாஸ்து குறையால் வீட்டை இடிக்க தயங்கும் சிலர் வாஸ்து தோஷம் போக்க இவ்வாறு பூசுகிறார்களாம். பிறரின் திருஷ்டி படாமல் இது தடுக்குமாம். ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?

நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு வாஸ்துவில் மட்டும் குறை இருப்பதாக தெரியவில்லை..!