இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இறை உருவங்களுக்கு அணிகலன்களாக மகுடம், குண்டலம், கண்டி, ஆரம், கேயூரம், யக்ஞோபவிதம், உதரபந்தம், சன்னவீரம், கடிசூத்திரம், ஊருமாலை, கண்டமாலை முதலியவை பெரும்பாலும் அமையப் பெற்றிருக்கும்.
இவற்றில் மகுடமானது தலைக்கு மேல் அணியப்படுவதாகும். இது கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம் எனப் பலவகைப்படும். இவற்றில் திருமாலின் தலையில் இடம் பெறுவது கிரீட மகுடமாகும். தேவியர் மற்றும் முருகன் கணபதி ஆகியோர்களுக்கு அமைக்கப்படுவது கரண்ட மகுடமாகும். சடையையே மகுடம் போல் அமைப்பது சடா மகுடம் எனப்படும். சடா மகுடம் பெரும்பாலும் சிவனுக்கே அமைக்கப்படும். மாரியம்மன், காளி முதலான இறை உருவங்களுக்கு தீக்கிரீடம் எனப்படும் ஜீவால மகுடம் இடம் பெறும்.
அடுத்ததாக, காதில் அணியப்படும் அணிகலனைக் குண்டலம் என்பர். இது பத்ர குண்டலம், மகர குண்டலம் என இரண்டு வகைப்படும். இதில் விஷ்ணுவுக்கு இட்ம்பெறும் காதணிகளை மகர குண்டலம் என அழைப்பர். சிவபெருமானது காதணிகளாக வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் தோடும் இடம் பெறும். சிவபெருமானின் இடதுபுறப் பாதி உடல் சக்தியின் அம்சமாகக் காட்டப்படும் புராண மரபை ஒட்டியே இவரது இடது காதில் தோடு இடம் பெறுகிறது.
அணிகலன்களில் கண்டிகை என்பதும் கண்டமாலை என்பதும் கழுத்தை ஒட்டி அமையும் அணிகலன்களாகும். ஆரம் என்பது கழுத்திலிருந்து மார்பு வரை தொங்கும் மாலையாகும். கேயூரம் என்பது மேற்கையின் நடுவில் அணியப் பெறுவதாகும். யக்ஞோபவிதம் எனும் பூணூல் இடது தோளிலிருந்து வலப்புற இடுப்பு வரை காணப்படும் அமைப்பாகும். மார்பிற்குக் கீழும், உந்திக்கு மேலும் அணியப்படும் பட்டையான அணிகலனே உதரபந்தம் எனப்படும். ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் இரு பூணூல்களைப் போன்ற அமைப்பு சன்னவீரம் எனப்படும். இது வீரத்துடன் தொடர்புடைய ஆண்,பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கப்படும். இதற்கு உதாரணமாக, சுப்ரமண்யர், இந்திரன், தடாதகைப்பிராட்டி ஆகிய இறையுருவங்களைக் கூறலாம். கடிசூத்திரம் என்பது ஒட்டியானம் போன்ற அமைப்பினை உடையது. இதன் நடுவில் சிங்கம் அல்லது யாளிமுகம் அமைக்கப்படும். சிலம்பு எனும் அணிகலன் மகளிர்க்கும், கழல் எனும் அணிகலன் ஆடவருக்கும் உரியவை.
இறையுருவங்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்களை
1. தலையணி வகை
2. கழுத்தணி வகை
3. காதணி வகை
4. மூக்கணி வகை
5. கையணி வகை
6. கை விரலணி வகை
7. இடையணி வகை
8. துடையணி வகை
9. பாத அணி வகை
10. கால் விரலணி வகை
என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி: டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்
No comments:
Post a Comment