நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.
பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.
ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.
இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.
டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி
என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!
தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை
அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
நான்
பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!
இன்று நான்
இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நான்
சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!
ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்
அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்
அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை
தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி
செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
......................
.....................
...................நன்றி.
ADS
AD
Tuesday, October 27, 2009
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
:::Excellent.these words are What we have in Our heart.When anyone feel only we can express the feelings.that also symbol of Tamilan..Keep it up.
Arumai. One thing for sure. I do not want to be called an Indian. My identity is Tamil and I want to be called just that...
Post a Comment