ADS

AD

Saturday, December 26, 2009

தாய்(பறவை) பசித்திருக்கும் தனிமை

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு 2010 வாழ்த்துக்கள்

உண்ணுகின்ற வட்டிலிலே ஓட்டையிடச் சொல்லுகின்ற

உத்தியே உயர்ந்ததென்னும் தலைமை வேண்டாம்;

உடனிருந்து பணியாற்றும் அதிகாரியைக் கொன்று

தன் குடும்பம் உயர்த்துகின்ற மடமை வேண்டாம்;


மின்னுகின்ற தாரகையைத் தினமெண்ணும் திருத்தொண்டே

அரசாங்கப் பணியென்னும் அவலம் வேண்டாம்;

கண்ணெதிரே நடக்கின்ற கயமைகளைக் கண்டபின்னும்

கைகட்டி வாய்பொத்தும் அச்சம் வேண்டாம்;


எண்ணுகின்ற எண்ணமும் எழுதிப்படிப்பதுவும்

பணம் பண்ணத்தான் என்னும் கல்வி வேண்டாம்;

எதிரிலே இருப்பவனை ஏமாற்றிப்பொருள் சேர்க்கும்

ஏய்ப்புக்குத் துதிபாடும் சந்தை வேண்டாம்;



ஒரு கூட்டுப்பறவைகள் பல நாட்டில் இரைதேட

தாய்ப்பறவை பசித்திருக்கும் தனிமை வேண்டாம்;


பலநாட்டுப் பண்பாட்டைப் போற்றியே மதித்தாலும்

நம் பண்பைச் சீரழிக்கும் துணிவு வேண்டாம்;



ஏறுகிற எல்லாமும் இறங்குமெனும் சித்தாந்தம்

இறைவனது ஆட்டமெனும் உணர்வு வேண்டும்;

ஒருகதவு மூடிவிட்டால் மறுகதவு திறக்குமெனும்

ஓயாத நம்பிக்கை இருக்க வேண்டும்;


மாறுகிற பழமையுடன் சேருகிற புதுமைகளை

வடிகட்டித் தேர்ந்தெடுத்துத் தழுவ வேண்டும்;

தானுயரும் வேளையிலே தனைச்சார்ந்த அனைவரையும்

தோளேற்றிச் சுமக்கின்ற மனது வேண்டும்;


பாரதியும் கம்பனும் வள்ளுவனும் உரிமையுடன்

தமிழ் சொல்லிக் கேட்கின்ற கல்வி வேண்டும்;

பாரதிரப்பல தொழிலின் சிகரத்தை தொடுமளவு

நுண்ணறிவுத் திறம்படைத்த இளமை வேண்டும்;


வானுயரக் கொடிபறக்க பாரெங்கள் தேசமென்று

ஒருசேரக் குரல் கொடுக்கும் மாண்பு வேண்டும்;

வருகின்ற புத்தாண்டில் வடிக்கின்ற பொங்கலிலே

வள்ளி மணவாளவன் கருணை வேண்டும்;


இனிய கவிதை ஆக்கியவர்: திரு. இயக்கோகா சுப்பிரமணியம் அவர்கள்

No comments: