ADS

AD

Wednesday, July 1, 2009

வாங்க விரதம் இருக்கலாம்

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணாக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்படாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலாக மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.


விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெறுவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதே அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையில் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாட்கள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப் படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமையாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்பு புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

-----------------------------ஸ்வாமி ஓம்கார்

No comments: