ப்ராப்தம்
- உங்களுக்காக பிறந்தவர்
ஸ்வாமி ஓம்கார்
தற்காலத்தில் சாபக்கேடு என எதை சொல்லலாம்?
1) இளமையில் வறுமை?
2) கொடிய நோய்?
3) ஊனம்?
இல்லை. இல்லை. இதைக்காட்டிலும் அதிக துன்பம் கொடுப்பது எது தெரியுமா?
உங்களுக்கு திருமண வயதில் மகனோ/மகளோ இருந்தால் இதை விட கொடுமை வேறு இல்லை. இவ்வளவு தாழ்த்தி கூற காரணம் என்ன? இக்கால ஜோதிடர்களின் சர்வதிகாரத்திற்கு அடிமைப்பட்டு "ஜாதக பொருத்தம்" என்னும் சிறையில் தண்டனையை அனுபவிக்கிறார்கள். ஒருவர் தன் மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தால் அவரும் அவரின் குடுப்பத்தாரும் மன அளவில் துன்பப்பட்டு கலங்கும் வரை இவர்கள் விடுவதில்லை.
"தோஷ ஜாதகம்" இதனால் உங்கள் பையனுக்கு ஜாதகம் அமையாது என்று தந்தை அவதிப்படுவதும், மறுபுறம் "சுத்த ஜாதகம்" இதற்கும் ஜாதகம் அமையாது என கூறுவதை கேள்விப்படுகிறோம். ஆக ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? சுத்தமாகவா - அசுத்தமாகவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருக்கு இருக்கும் ஜாதகம் மற்றொருவருக்கு இருக்காது என்பது விதி. இதன் அடிப்படியில் பார்த்தால் இரு ஜாதகத்தை ஒப்பிட்டு பார்த்து இது சுத்தம் - இது தோஷம் என சொல்ல முடியாது. கடவுள் அனைவரையும் ஓர் தனித்தன்மையில் படைக்கிறார். உங்களுக்கு இருக்கும் குடும்பம்-குழந்தைகள்- தொழில் இவை உலகில் வேறு ஏதேனும் பகுதியில் உள்ள ஒருவருக்கும் இதே போன்று இருக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இருக்க முடியாது.
உங்கள் மனதை போன்ற மென்மையான மலரை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா மலரும் பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும் , அந்த செடியின் வேறு வேறு பாகத்தில் மலர்கிறது. இதை போன்ற தெய்வீக படைப்பான நீங்கள், பார்ப்பதற்கு ஒரே இனமானாலும் உங்கள் பிறப்பின் நோக்கம் வேறாகும்.
இவ்வாறு இருக்க உங்களை மற்றொருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி தோஷமானவர், யோகமானவர் என சொல்ல முடியுமா?
திருமணம் என்று வரன் பார்க்க துவங்கியதுமே, செவ்வாய் தோஷம் , நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் என ஜாதகத்தை இழிவு படுத்துவதும், உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகம் அவ்வளவு சீக்கிரம் மற்றொரு ஜாதகத்துடன் சேராது என சொல்லுவதும் முட்டாள்தனமானது.
20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தவர்களை நீங்கள் கேட்டுப்பாருங்கள்- அவர்களுக்கு இவை புதுசு. அவர்கள் ஜாதகபொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள் என கேட்டால் இல்லை என்றே பதில் வரும்.
ஜோதிட சாஸ்திரத்தில் பத்து பொருத்தம் பார்ப்பது என்பது கிடையாது. நவீன காலத்தில் சில ஜோதிடர்கள் தங்கள் வருமானத்திற்காக ஏற்படுத்திய விஷயம் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்க்கலாம் எனும் புத்தகம் வேறு பிளட்பாரம் வரை விற்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பொருத்தம் பார்த்து வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவது நல்லதா?
பின்பு எப்படித்தான் திருமணத்தை முடிவுசெய்வது? ப்ராப்தம் என்பதை பார்த்தால் மட்டுமே இதற்கு தீர்வுண்டு.
ப்ராப்தம் என்றால்?
" ப்ராப்தம் " இந்த வார்த்தையே உங்களுக்கு பல விஷயத்தை சொல்லும். முடிவு செய்யபட்ட ஒன்று அல்லது விதிக்கப்பட ஒன்று என சொல்லலாம். உங்களுக்கு முடிவு செய்யப்பட்ட வாழ்க்கை துணைவர் இவர்தான் என துல்லியமாக சொல்லும் முறையே ப்ராப்தம்.
பெண் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் ராசி/நட்சத்திரம், லக்னத்தின் ராசி /நட்சத்திரம் மற்றும் ஜாதகர் பிறந்த கிழமையின் அதிபதி , ஆண் ஜாதகத்தில் நடப்பு தசா-புக்தி -அந்திரம் இவற்றுடன் இணைந்தால் ப்ராப்தம் உண்டு.இதில் ஒரு கிரகம் இல்லை என்றாலும் ப்ராப்தம் இல்லை.
இது போன்ற இணைப்பு அனைத்து ஜாதகத்துடனும் இருக்காது. ஜாதகி யாரை திருமணம் செய்ய போகிறார்களோ அவர்களுடன் மட்டுமே இருக்கும்.
திருமணத்திற்கு மட்டும் இல்லாமல், தந்தை-மகன் , சகோதர- சகோதரி மற்றும் வியாபார கூட்டாளி என வாழ்க்கையில் மற்றொருவருடன் இணையும் தருணத்தில் ப்ராப்தம் இருந்தால் மட்டுமே முடியும். கடவுள் உலகில் அனைவரையும் ஓர் சட்டதிட்டத்தில் இணைத்திருக்கிறார்- அவரின் அனுமதி இல்லை என்றால் எதுவும் நடக்காது என ப்ராப்தத்தை அறிந்தவர்களுக்கே தெரியும்.
ரமணமகரிஷியின் அமுத மொழியை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்,
"அவரவர் ப்ராப்த பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின் மௌனமாயிருக்கை நன்று"
திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கை முழுவதும் ப்ராப்தத்தின் விளையாட்டை இவரைவிட வேறு யார் தெளிவுபடுத்த முடியும்? உங்கள் ஒவ்வொரு செயலிலும் இதை மனதில் கொண்டு செயல்படுத்தி உங்கள் வாழ்க்கை வளமடைய வாழ்த்துகிறேன்.
மேலும் இது போன்ற அரிய விஷயங்களை அறிய http://vediceye.blogspot.com செல்லுங்கள்
2 comments:
ரமணமகரிஷியின் அமுத மொழி மிகவும் அழகாக இருந்தது.உங்களது கருத்து முலம் அறியாதவைகளை தெரிந்துகொண்டோம்
"அவரவர் எண்ணப்பதிவின் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது.
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது.
இதுவே திண்ணம்.
ஆதலின்எண்ணங்களற்று மௌனமாயிருக்கை நன்று"
Post a Comment