இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது.
சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை.
மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.
TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.
பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்?
அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.
No comments:
Post a Comment