புத்தாண்டு 2013 வாழ்த்து
தமிழனைத்தமிழன் சந்திக்கும்போது
ஆங்கிலம் பேசுதல் சரிதானா!
தன்னினம் என்று பெருமை கொள்ளாமல்
தன்னை மறைத்தல் சரிதானா!
காசுகள் கொடுத்து மதத்தை
மாற்றி
பகைமையை வளர்ப்பது சரிதானா!
யாசகம் அளிப்பவர் யாரென
அறியா
அடிமை மனநிலை சரிதானா!
மேதைகள் கலங்கிட பேதைகள் முழங்கிட
நீதியை வதைப்பது சரிதானா!
ஊதியம் கொடுக்கும் ஆலைகள்
முடங்கிட
பாதையை சிதைப்பது சரிதானா!
ஏய்த்துப்பிழைப்பவர் உரைகளை
நம்பி
ஏமாந்து அலைவது சரிதானா!
சாய்ந்து விழும்வரை மதுவினை
ஊற்றும்
அரசின் வணிகம் சரிதானா!
சாதிகள் சொல்லிச் சனங்களைப்பிரித்து
சண்டைகள் செய்வது சரிதானா!
போதிமரத்துக்கும் சாயம்பூசும்
போர்க்குணம் கொள்வது சரிதானா!
சுயநலம் கொண்டவர் புயபலம்
கண்டு
சுயபலம் இழப்பது சரிதானா!
வடபுலம் வணங்கித் தென்புலம்
தாழ்த்தும்
குணநலம் வளர்ப்பது சரிதானா!
இலவசம் பெறுவதும் அதுவிஷம்
எனினும்
பரவசம் அடைவது சரிதானா!
நவரசம் ததும்பும் நாநயம் நம்பி
நாணயம் மறப்பது சரிதானா!
நாத்தழும்பேறிட நாத்திகம்
பேசி
மனிதரைத்தொழுவது சரிதானா!
ஆத்திரம் கொண்டு பாத்திரம்
உடைத்தபின்
கோத்திரம் கணிப்பது சரிதானா!
அணுவைப்பிளந்த கதிரில் பிறந்த
மின்சக்தியை மறுப்பது சரிதானா!
அனுதினத்தேவைக்கு மாற்றறியாமல்
அரசை இகழ்வது சரிதானா!
பின்னணி தெரிந்தும் அரியணை
ஏற்றிப்
பின்னர் பழிப்பது சரிதானா!
மன்னரை மாற்றிடும் முத்திரை
இருந்தும்
மெளன நித்திரை சரிதானா!
வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும்
உள்ளம் தொலைப்பது சரிதானா!
தெள்ளத்தெளிந்து நல்லவர் சொன்னதை
எள்ளி நகைப்பது சரிதானா!
குன்றினில் அமர்ந்து மன்றம் நடத்தும்
குகனே சண்முக வேலவனே!
இன்றுடன் போகட்டும் இனிவரும் ஆண்டில்
நலமே பொங்கிட அருள்வாயா!
நன்றி கலந்த வணக்கம்: திரு சுப்பிரமணியம் அவர்கள்
No comments:
Post a Comment