கிரஹணம் நமது கலாச்சாரத்தில் மிக முக்கிய இடத்தை பெறும் ஒரு இயற்கை நிகழ்வு.
கிரகணம் என்றால் என்ன என தெரிந்து கொள்வது அவசியம். ‘கிரஹண்’ எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு ஒளி இழந்த தன்மை என பொருள்.
இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்
செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.
பறவை மற்றும் விலங்கினங்கள் கூட கிரஹணத்தன்று தன் இருப்பிடத்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா?
கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.
கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.
எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.
ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும்.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.
இந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி இந்தியாவில் முழு கிரஹணம் ஏற்படுகிறது. காலை 5.29 முதல் 7.15 வரை கிரஹண நேரம்.
கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.
கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
கிரஹணம் பூச நட்சத்திரத்தில் அமைவதால் கடகராசி, மகராசியில் பிறந்தவர்களும் , அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அதிக ஆன்மீக முன்னேற்றம் அடைவார்கள். அவர்கள் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்வதோ அல்லது வீட்டில் இருந்து ஜபம் செய்வதோ மேன்மை கொடுக்கும்