ஏதோ ஒரு நூற்பாலையில் காசோலைகள் திரும்பிவிட்டன அல்லது பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி ஒட்டு மொத்த ஜவுளி ஆலைகளையே அந்த பார்வை பார்ப்பது சில பத்திரிக்கைகள் மட்டுமே செய்து வந்தன. ஏனோ தற்போது தினமணியும் அந்த அளவுக்கு கீழே இறங்கி விட்டது. அதாவது இது சுமங்கலித்திட்டம் என்கிறார்களே அது எங்கேயும் கிடையாது. இதெல்லாம் பத்திரிகைகளும் சில தொழிற்சங்கங்களும் கண்டுபிடித்த வார்த்தை.
எங்கோ ஒரு குக்கிராமத்தில் படிக்க இயலாத பெண்களை அழைத்து வந்து ஆலைகளில் வேலைக்கு சேர்ப்பது ஒவ்வொரு பெண்ணின் பெற்றோர்களே. அவர்கள் ஒன்றும் தமது பெண்குழந்தைகளை பணம் பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக விட்டுச்செல்வதில்லை. வருகிறார்கள். ஆலையைப்பார்க்கிறார்கள். அங்குள்ள சக தொழிலாளர்களிடம் பலமுறை விசாரிக்கிறார்கள். அதற்கப்புறம் தான் தனது பெண்குழந்தகளை விட்டுசெல்கிறார்கள்.
எங்கோ தென்மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் தினமும் கோவை வந்து ஆலை வேலை செய்து கொண்டு தினமும் தன் வீட்டுக்கு திரும்பிச்செல்ல முடியாது. ஆகவே தான் அவர்கள் ஒரு குழுவாக வந்து ஆலைப்பணி செய்ய வருகிறார்கள். இப்படி வரும் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் உறைவிட வசதி செய்து தருவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களுக்கு உணவு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் தினசரி பெறும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு அவர்கள் கைச்செலவுக்கு போக மீதம் இருப்பதை ஒருவருடம் கழித்தோ, இரண்டு வருடம் கழித்தோமூன்று வருடம் கழித்தோ தரும்போது அது 30000 அல்லது 40000 ஆகப்பெருகித்தான் இருக்கும்.
இதற்கு மேலும் அவர்கள் பணிபுரிந்தாலும் இதே நிலைதான். அவர்கள் தொடர்ந்து பணிபுரிய விருப்பப்பட்டால் ஆலை நிர்வாகங்கள் அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்க தயங்குவதில்லை. ஆனால் அவர்கள் எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு சேமிப்பு கிடைத்ததும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திருமணம் செய்துகொண்டு தங்கள் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.
இப்படியெல்லாம் வாழ்வாதாரம் இருப்பதால் தான் இப்போது பெண்சிசுக்கொலைகளே இல்லை என்ற நிலை வந்திருப்பதை யாரேனும் மறுக்க முடியமா?
குறந்தபட்சம் பத்தாம் வகுப்பு பரை படித்திருப்பவர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நிலை இருப்பதால் இப்போதெல்லாம் பெண்குழந்தைகளின் கல்வியறிவு சதவீதம் அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியுமா?
பள்ளிப்படிப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க முடியாமல் எத்தனை பெற்றோர்கள் கஷ்டப்படுகிறார்கள்
தெரியுமா?
அந்த பெண் குழந்தைகளை திருமணம் ஆகும் வரைக்கும் வீட்டில் வைத்துக்கொண்டு மடியில் நெருப்பைக் கட்டியவாறு இருந்த நிலை இப்போது இல்லையே. காரணம் இந்த ஆலை வேலை தான்.
இவர்களுக்கு நியாயமான ஊதியம், சுகாதாரமான தங்குமிடம், போதிய ஓய்வு, விபத்து மற்றும் நோய்க்கான செலவுத்தொகை ஆகியவற்றை எல்லா ஆலைகளுமே இலவசமாக போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன. ஏனென்றால் ஆட்கள் கிடைப்பது அவ்வளவு அரிதாக உள்ளது.
இங்கு ஆலையில் உள்ள நேரம் போக அவர்களுக்கு இலவசமாக யோகா, தையல் பயிற்சி, கூடை பின்னுதல் போன்ற கைத்தொழில்களும் நிறைய ஆலைகளில் கற்றுத்தரப்படுகிறது. இவற்றையெல்லாம் அவர்கள் கிராமத்தில் நினைத்துப்பார்க்ககூட முடியாது. அவர்கள் திருமணத்திற்குப்பின்னும் இதனால் பயன் பெறுகிறார்கள். இங்கு வந்து சுகாதாரமாக இருந்து பழகி விடுகின்றார்கள். அவர்களது கிராமத்து வாழ்க்கைமுறையை இங்கு வந்து மாற்றிக்கொண்டு இவர்கள் பண்பட்டு செல்கிறார்கள். அவர்களது நடை உடை பாவனைகளே மாறி ஒரு புதுப்பொலிவுடன் இருப்பதை பார்த்து செல்வதை அவர்களது பெற்றோர் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இப்படி நிலை இருக்க ஏதோ ஒரு சம்பவத்தைகாட்டி ஒட்டுமொத்த ஆலைகளையும் எடைபோடுவதை பத்திரிக்கைகள் நிறுத்தவேண்டும்.
ஏதோ ஒரு இடத்தில் நடப்பதைவைத்து அனைவரையும் அந்த லிஸ்டில் சேர்க்காதீர்கள்.
ஏதோ ஒரு பத்திரிக்கை மஞ்சள் பத்திரிக்கயாக இருப்பதை வைத்துக்கொண்டு நாங்கள் அனைத்துப் பத்திரிக்கைகளையும் மஞ்சள் பத்திரிக்கைகள் என விமர்சனம் செய்வதில்லயே?
இந்த சுரண்டுதல், ரத்தத்தை உறுஞ்சுதல், என்கின்ற ஹைதர் கால பல்லவி பாடுவதை விட்டொழியுங்கள்.
பத்திரிக்கைகளும், மீடியாக்களும் தங்களது நிருபர்களை ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்கே பாமரன் படும் பாட்டை கேளுங்கள். சான்றிதழ்களுக்காக திரும்பத்திரும்ப ஒரே அலுவலகத்துக்கு மாறி மாறி அலையும் அவல நிலையை பாருங்கள். லஞ்சம் வாங்கும் பேய்களை விரட்டுங்கள். அந்த அதிகாரிகளின் தோலை உரியுங்கள்.
அதைவிட்டு இப்படியெல்லாம் எழுதி ஏழைப்பெண்களின் வேலை வாய்ப்பினில் மண்ணைத்தூவாதீர்கள். நேராகச் செல்லுங்கள். ஆலையில் பணிபுரியும் பெண்களைக் கேளுங்கள் ஏதாவது தவறு இருந்தால் ஆலை நிர்வாகத்திடம் சொல்லி நல்லது செய்யப்பாருங்கள்.
மறுபடியும் பெண் சிசுக்கொலைகளுக்கு வித்திடாதீர்கள்