ADS

AD

Wednesday, February 18, 2015

ஜாதிகள் வேண்டும்


ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும்.

இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை  இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். சில இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 101, 501 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.

கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.

திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.


உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

thanks to: Rams Blog - http://www.sivakasikaran.com