"மன்னாதி மன்னராக வலம் வந்த மந்திரிகள் மாயமாகி மக்கள் பணி புரிவோர் ஆளும் காலம் வரும்
மின்னும் வெண்திரைகள் மதி கெடுக்கும் நிகழ்ச்சிகட்கு முடிவுகட்டி முடங்க வைக்கும் முற்போக்கு காலம் வரும்
தவறிழைத்து பொருள் சேர்த்த நீதிமன்னர் தடம் மாறிப்போனதாலே அவர்தம் தறி கெட்டு போகின்ற காலம் வரும்
படித்தவர்கள் சூதாடும் பணச்சந்தை பலமிழந்து அவர்தாம் பண்போடு பொருளீட்டும் காலம் வரும்
பள்ளிகளே பணம் சேர்க்கும் வணிக நிலை மாறி நல்லதொரு தலைமுறையை நமக்கீனும் காலம் வரும்
வெளிநாட்டு வேலை என்னும் விபரீத மாயை நீங்கி நம்நாட்டின் சேவையே நலமென்னும் காலம் வரும்
காவலரே கொள்ளையராய் ஆன நிலை நீங்கி காவலே தேவையில்லை எனும் பொற்காலம் வரும்
ஊடகங்கள் உண்மைகளை உரைக்கா நிலை மாறி நடுவுநிலை தவறாமல் நவிலும் நற்காலம் வரும்
வீடுகளாய் ஆகிவிட்டு எஞ்சிநின்ற விளைநிலங்கள் விஞ்சுகின்ற விளைச்சல் தரும் காலம் வரும்
மாடுகள் உண்ணுகின்ற புல்களுக்கே கழிவுநீர் பயனாகி மாசில்லா நீர்த்தேக்கம் நாடெங்கும் பெருகி வரும்
இலவசங்கள் என்னும் பிச்சைகள் இல்லாமல் ஒழிந்து, இருளான பாரதம் பகலாக மாறிட தடையின்றி மின்சாரம் தவழ்கின்ற காலம் வரும்
மதுவிலக்கு நாடெல்லாம் சட்டமாகி மனை மக்கள் மாட்சி பெரும் காலம் வரும்
தலைமுறைக்கு பொருள் சேர்த்து தனயனையே அரியணைக்கு அமர்த்தும் இக்காலம் மாறும்
விலைகொடுத்து வாங்குகின்ற வாக்கு வெற்றி அரசியல் வீணாகும் காலம் வரும்
நல்லதொரு பாரதத்தை உருவாக்க எமக்கெல்லாம் அருள்புரிவாய் எம்பெருமானே
நல்லதொரு தலைவன் வேண்டும் வருமாண்டில் எமக்கருள்வாய் முருகப்பெருமானே"