ADS

AD

Thursday, September 10, 2009

திருவண்ணாமலை கிரிவலம்

------ஸ்வாமி ஓம்கார்

வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு. பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம்.

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.


தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது.
கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

மலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?